டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்ராத் எடுத்த 563 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சமன் செய்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. 3-1 என இந்த தொடரை இங்கிலாந்து அணி, முதல் நான்கு போட்டிகளிலேயே கைப்பற்றிவிட்ட நிலையில் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும், இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. 

40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, அலெஸ்டர் குக் மற்றும் ஜோ ரூட்டின் அபார சதத்தால் 423 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 464 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 2 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய மூன்றாவது ஓவரில் ஷிகர் தவானும் புஜாராவும் அவுட்டாகினர். 3வது ஓவரின் 3வது பந்தில் தவானை வீழ்த்திய ஆண்டர்சன், அந்த ஓவரின் கடைசி பந்தில் புஜாராவை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 563 விக்கெட்டுகளை வீழ்த்தி, மெக்ராத்தை சமன் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்கு மெக்ராத்தே சொந்தக்காரராக இருந்தார். இந்நிலையில் தற்போது அவரை ஆண்டர்சன் சமன் செய்துள்ளார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி ஆண்டர்சன் முந்திவிடுவார். 

143வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை ஆண்டர்சன் எட்டியுள்ளார். ஆனால் மெக்ராத் 124 போட்டிகளில் ஆடி 563 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முரளிதரன், வார்னே, கும்ப்ளேவிற்கு அடுத்த நான்காவது இடத்தை பிடித்துவிடுவார்.