இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் அம்பயர் குமார் தர்மசேனாவுடன் ஆண்டர்சன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றநிலையில், கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரியும் ரவீந்திர ஜடேஜாவும் களத்தில் இருந்தனர். இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை விஹாரியும் ஜடேஜாவும் தொடர்ந்து ஆடிவருகின்றனர். 

இந்த போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் 29வது ஓவரை வீசினார் ஆண்டர்சன். ஆண்டர்சன் வீசிய 29வது ஓவரின் 3வது பந்து, கோலியின் கால்காப்பில் பட்டது. அதற்கு ஆண்டர்சன் அவுட் கேட்க, அவுட் இல்லை என்று மறுத்தார் அம்பயர் குமார் தர்மசேனா. உடனே அதற்கு ரிவியூ கேட்கப்பட்டது. மூன்றாவது அம்பயரும் அவுட் இல்லை என கூறிவிட்டார். அதனால் விரக்தியடைந்த ஆண்டர்சன், அந்த ஓவர் முடிந்ததும் அம்பயர் குமார் தர்மசேனாவிடமிருந்து தொப்பியை கடுப்பாக வாங்கியதோடு அதை வீசிவிட்டு, அம்பயரிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதமும் செய்தார். 

ஐசிசி விதிகளின்படி, இது விதிமீறல் என்பதால், ஆண்டர்சனுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 15% தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.