வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரிவியூ கேட்பதில் தோனி கைவிரித்துவிட்ட நிலையில், ஜடேஜா சரியான முடிவெடுத்தார். 

பொதுவாக ரிவியூ கேட்பதில் கோலி அவசரப்பட்டு செயல்படுவதால், முக்கியமான நேரங்களில் ரிவியூ இல்லாமல் போய்விடுகிறது. எனவே கோலி ரிவியூ கேட்பதில் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும் என்ற கருத்து உள்ளது. 

ரிவியூ கேட்பதில் கோலி மீது விமர்சனங்களும் உள்ளன. ஆனால் ரிவியூ கேட்பதில் தோனி வல்லவர். விக்கெட் கீப்பராக இருப்பதால் அவருக்குத்தான் தெளிவான வியூவ் இருக்கும். ஆனால் அது அனைத்து விக்கெட் கீப்பர்களுக்கும் பொருந்தாது. தோனி தெளிவாக கணித்துத்தான் ரிவியூ கேட்பாரே தவிர, கேட்டுப்பார்க்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் பெரும்பாலும் கேட்கமாட்டார். 

ரிவியூ விஷயத்தில் தோனியின் முடிவு சரியாக இருக்கும் என்பதால், அவரது இசைவு பெற்றபிறகே ரிவியூ கேட்கப்படும். ஆனால் அவரும் அனைத்து நேரங்களிலும் சரியாக சொல்லிவிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. சில நேரங்களில் எதிர்மறையான முடிவு கிடைப்பது இயல்புதான். ஆனால் பெரும்பாலும் தோனி சொன்னால் சரியாக இருக்கும். அதேநேரத்தில் சந்தேகமாக இருந்தால், தோனி ஓகே சொல்லமாட்டார். பவுலர் மற்றும் கேப்டனின் முடிவுக்கே விட்டுவிடுவார். அவர் அப்படி செய்யவில்லை என்றாலும் அதுதான் எதார்த்தம். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நேற்றைய கடைசி போட்டியில் அந்த அணியின் அபாயகரமான வீரரான ஹெட்மயருக்கு எல்பிடபிள்யூ அப்பீல் செய்தார் ஜடேஜா. ஆனால் அம்பயர் மறுத்துவிட, ரிவியூ கேட்பதற்காக தோனியை பார்த்தார் ஜடேஜா. ஆனால் தோனி சந்தேகத்துடன் இருக்க, உறுதியாக இருந்தார் ஜடேஜா. ஜடேஜாவின் உறுதியை ஏற்று கோலி ரிவியூ கேட்டார். மூன்றாவது அம்பயர் ரிவியூ செய்து பார்த்ததில் அவுட் என்பது உறுதியானது. ஹெட்மயர் வெளியேறினார். 

தோனி கேப்டனாக இருந்ததில் இருந்தே அவரது தளபதிகளில் ஒருவரான ஜடேஜா, அவரிடமிருந்து இதைக்கூடவா கற்றுக்கொள்ளாமல் இருப்பார்..? சொல்லப்போனால், சரியாக கணித்து சொல்லும் தோனியையே மிஞ்சிவிட்டார் ஜடேஜா.