வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முக்கியமான நேரத்தில் பிரேக் கொடுத்து இந்திய அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டுவந்தது ஜடேஜா தான். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி குவாஹத்தியில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 322 ரன்கள் குவித்தது. 323 ரன்கள் என்ற இலக்கை ரோஹித் மற்றும் கோலியின் அபார பேட்டிங்கால் இந்திய அணி 42வது ஓவரிலேயே எளிதாக எட்டி வெற்றி பெற்றது. 

குவாஹத்தி மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், 323 என்ற இலக்கு எளிதாக சாத்தியமானது. அதேநேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி போன வேகத்திற்கு இந்த ஸ்கோர் குறைவுதான். அந்த அணியின் இளம் வீரர் ஹெட்மயர் இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். 

பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். அவரின் அதிரடியான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவருக்கே 200 ரன்கள் எடுத்துவிட்டது. ஹெட்மயர் ஆடிய வேகத்திற்கு சதமடித்த பிறகும் அவர் தொடர்ந்து ஆடியிருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி மெகா ஸ்கோரை எட்டியிருக்கும். ஆனால் ஹெட்மயர் சதமடித்த சிறிது நேரத்திலேயே 106 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். ஹெட்மயரை ஜடேஜா தனது சுழலில் வீழ்த்தினார். 

ஹெட்மயர் 39வது ஓவரில் அந்த அணியின் ஸ்கோர் 248 ரன்களாக இருக்கும்போது ஆட்டமிழந்தார். அதன்பிறகு 11 ஓவருக்கு அந்த அணி 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதே ஹெட்மயர் அவுட்டாகாமல் ஆடியிருந்தால், அந்த அணியின் ஸ்கோர் 350 ரன்களை கண்டிப்பாக கடந்திருக்கும். இந்திய அணி ஆடிய வேகத்திற்கு 350 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கையும் எட்டியிருந்திருக்கும் என்றாலும், அந்த அணியின் ஸ்கோர் 30 ரன்கள் குறைவுதான்.

அதற்கு காரணம் ஹெட்மயரின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியதுதான். ஜடேஜா அவரை வீழ்த்தவில்லை என்றால் மெகா ஸ்கோர் உறுதியாகியிருக்கும். ஸ்கோர் ஒருபுறமிருக்க, ஹெட்மயர் ஆடியவிதம் அபாரமானது. இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினார். அவர் களத்தில் இருந்தபோது இந்திய அணி நிராயுதபாணியாக நின்றது. அவரது விக்கெட்டை வீழ்த்தி ஜடேஜா பிரேக் கொடுத்த பிறகுதான் இந்திய அணி போட்டிக்குள் வந்தது.