jadeja bowled well in the match against rcb
சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, தன் மீதான விமர்சனங்களுக்கு பவுலிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு களமிறங்கியுள்ள சென்னை அணி, சிறப்பாக ஆடிவருகிறது. இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.
இந்நிலையில், தோனியின் நம்பிக்கைக்குரிய வீரராக வலம்வரும் ரவீந்திர ஜடேஜா, கொல்கத்தாவிற்கு எதிரான போட்டிக்கு பிறகு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். ஜடேஜாவை விட கரண் சர்மா நன்றாக பந்துவீசுகிறார். ஆனாலும் கரண் சர்மாவைவிட ஜடேஜாவிற்கே தோனி முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும் அதேபோல பேட்டிங்கிலும் பிராவோவிற்கு முன்னதாக ஜடேஜாவை களமிறக்குகிறார் என்றும் கருத்துகள் எழுந்தன.
ஜடேஜாவைவிட அதிகமான ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் அதிரடி வீரர் பிராவோவை முன்னதாக இறக்காமல் ஜடேஜாவை இறக்குவதால், ரன் வேகம் குறைகிறது. ஆனாலும் தோனி ஜடேஜாவிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற குரல்கள் எழ ஆரம்பித்தன. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சோபிக்கவில்லை என்றாலும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுவந்த ஜடேஜா, கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அதிலும் கோட்டைவிட்டார்.
சுனில் நரைனுக்கு அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு கேட்ச்களை தவறவிட்டார் ஜடேஜா. இதையடுத்து ஜடேஜாவிற்கு எதிரான விமர்சனங்கள் வலுத்தன.
இந்நிலையில், பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், சிறப்பாக பந்துவீசி தனது திறமையை நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசிய ஜடேஜா, 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி, பார்த்திவ் படேல், மந்தீப் சிங் ஆகிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தான் வீசிய முதல் பந்திலேயே கோலியை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.
இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா, ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.
