இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா சென்னை டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 66 ரேங்கிங் புள்ளிகளைப் பெற்று 6-ஆவது இடத்தில் இருந்து 2-ஆவது இடத்திற்கு அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

டெஸ்ட் வரலாற்றில் தரவரிசையில் முதல் இரு இடங்களை இந்திய பெளலர்கள் பிடிப்பது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்னர் 1974-இல் பிஷன் சிங் பேடி, சந்திரசேகர் ஆகியோர் முறையே முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா 26 விக்கெட்டுகளையும், அஸ்வின் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சென்னை டெஸ்டில் ஜடேஜா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 2 இடங்கள் முன்னேறி 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பெளலர்கள் தரவரிசையைப் போன்றே, ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் ஜடேஜா அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளார். தற்போது அவர் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 2-ஆவது இடத்தில் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் உள்ளார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் கருண் நாயர் மிகப்பெரிய ஏற்றம் கண்டுள்ளார். சென்னை டெஸ்டில் முச்சதம் கண்ட அவர் 122 இடங்கள் முன்னேறி 55-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சென்னை டெஸ்டில் 199 ரன்கள் குவித்த கே.எல்.ராகுல் 29 இடங்கள் முன்னேறி 51-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசையாகும்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

அணிகள் தரவரிசையில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் இந்த ஆண்டை முதலிடத்தோடு நிறைவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி (105 புள்ளிகள்) 2-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் (102 புள்ளிகள்) 3-ஆவது இடத்திலும் உள்ளன.