உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்திடம் தோற்றது துரதிருஷ்டவசமானது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை கண்டுகளிக்க திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகன்ற திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

திருச்சியில் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் அகன்ற திரை அமைக்கப்பட்டுள்ளது. அதில் திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் ஆட்டங்கள் ஒளிபரப்பானது.

அதில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

“டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியால் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல தளம் கிடைத்திருக்கிறது. பேட்ஸ்மேன்கள் 20 ஓவர் ஆட்டங்களை எதிர்கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்திடம் தோற்றது துரதிருஷ்டவசமானது. ஜூலான் கோஸ்வாமியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது” என்று அவர் கூறினார்.