ISL update extension of contract of players and coach of Chennai FC
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து அணியான சென்னையின் எஃப்சி தனது வீரர்களான மெயில்சன் ஆல்வ்ஸ், கிரேகரி நெல்சன் மற்றும் பயிற்சியாளர் ஜான் கிரேகரி ஆகியோருடனான ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து சீசனில் சென்னை அணி சாம்பியன் ஆனதில் இவர்களுக்கு முக்கியப் பங்கு இருந்ததென்றால் அது மிகையாகாது.
பெங்களூரு அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் நெல்சன் அடித்த இரு கார்னர் கிக்குகளை சரியான தருணத்தில் தலையால் முட்டி கோலடித்தார் மெயில்சன். இதனால் இறுதி ஆட்டத்தில் சென்னை 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரை வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
இதில் பிரேசிலைச் சேர்ந்த மெயில்சன் இந்த சீசன் முழுவதுமாகவே சென்னை கேப்டன் ஹென்ரிக் செரீனோவுடன் இணைந்து தடுப்பாட்டத்தில் சிறந்த அரணாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்த சீசனில் அதிக கோலடித்த தடுப்பாட்ட வீரர் என்ற பெருமையும் அவர் வசமே உள்ளது.
சென்னை அணி இதுவரை ஆடிய இரு இறுதி ஆட்டங்களிலுமே ஜேஜே, தோய் சிங் ஆகியோருடன் மெயில்சனும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நெல்சன் இந்த சீசனில் சென்னை அணியின் 5 கோல்களுக்கு உதவி புரிந்துள்ளார். அதில், அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் அவர் உதவியுடன் அடித்த கோல்களும் அடங்கும். அத்துடன், புணேவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கும் வழிவகுத்துள்ளார் நெல்சன்.
அதன்படி, மெயில்சனுடனான ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கும், நெல்சனுடனான ஒப்பந்தம் ஓராண்டுக்கும், அவர்களின் பயிற்சியாளர் ஜான் கிரேகரியின் ஒப்பந்தமும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
