5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 3 ஆவது போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியும், எஃப்சி  கோவா அணியும் மோதின.  கௌஹாத்தி இந்திரா காந்தி அதெலடிக் ஸ்டேடியத்தில் சரியாக நேற்று மாலை 7.30 மணிக்கு  ஆட்டம் தொடங்கியது.

டாஸ் வென்ற கோவா அணி தங்களது சைடைத் தேர்தெடுத்தது. ஆட்டம் தொடங்கிய உடனேயே சூடு பிடித்தது. இதையடுத்து நார்த் ஈஸ்ட் அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட நார்த் ஈஸ்ட் அணி , ஆட்டத்தின் 8 ஆவது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தியது. அந்த அணியின்  ஃபெடாரிக்கோ காலிகோ பந்தை லாவகமாக அடித்து கோல் போட்டார்.

இதையடுத்து கோல் கணக்கை சமன் செய்ய கடுமையாக  போராடிய கோவா அணியின் வீரர் ஃபெரோன் கோரோமினாஸ்  14 ஆவது நிமிடத்தில் அற்புதமாக ஒரு கோல் போட்டார். இதையடுத்து இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து 39 ஆவது நிமிடத்தில்  கோவா அணியின் வீரர் ஃபெரோன் கோரோமினாஸ்  மீண்டும் ஒரு ஒரு கோல் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் 2 -1 என்ற கோல் கணக்கில் கோவா அணி முன்னிலை பெற்றிருந்தது.

 

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீர்களும் விறுவிறுப்பில்லாமல் விளையாடினர். ஆனால் ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்லோமி ஒபிச்சே அழகான கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

56 ஆவது நிமிடத்தில் நார்த ஈஸ்ட் அணியின் கீகன் பெரேராவுக்கு  மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து 61 ஆவது நிமிடத்தில் அவர் வெளியேற்றப்பட்டு, ராபர்ட் களத்தில் இறங்கினார்.

இரு அணிகளிலும் மாற்று வீரர்கள் களமிறக்கப்பட்டனர், ஆனாலும் எந்த அணியுமே கோல் போம முடியவில்லை. இதையடுத்து நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி மற்றும்  எஃப்சி  கோவா அணிக்கு இடையே நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டம் டிராவில் முடிந்தது.