Isl Football Pune defeat Mumbai on its own soil

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 70-வது ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 70-வது ஆட்டம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று மாலை நடைபெற்றது.

விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது புணே. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் மும்பையின் தடுப்பாட்டத்தை தகர்த்த புணே, தனது முதல் கோலை பதிவு செய்தது.

கோல் போஸ்ட் அருகே சக வீரர் சர்தக் கோலுய் பாஸ் செய்த பந்தை லாவகமாக தட்டி கோல் போஸ்டுக்குள் அனுப்பினார் புணே வீரர் டியேகோ கார்லோஸ்.

முதல் பாதி ஆட்டம் நிறைவடைய புணே 1-0 என முன்னிலையில் இருந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதியிலும் புணே ஆதிக்கம் தொடர்ந்தது.

ஆனாலும், மும்பை தனது தடுப்பாட்டத்தை பலப்படுத்தியதால் அந்த அணிக்கு 2-வது கோல் வாய்ப்பு கிடைக்காமல் நீடித்தது. 57-வது நிமிடத்தில் மீண்டும் கோலடிக்கும் டியேகோ கார்லோஸின் முயற்சியை மும்பை வீரர் மார்சியோ ரொஸாரியோ அற்புதமாகத் தடுத்தார்.

தொடர்ந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளுக்கும் பலனின்றி ஆட்டம் நீடித்தது. ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் சக வீரர் ஜோனதன் லுக்கா உதவியுடன் அணியின் 2-வது கோல் அடித்தார் புணே வீரர் மார்செலோ பெரைரா. இதனால் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் புணே 2-0 என முன்னேறியது.இதனல், சொந்த மண்ணிலேயே வீழ்ந்தது மும்பை.

இத்துடன் 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள புணேவுக்கு இது 9-வது வெற்றியாகும். 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பைக்கு இது 7-வது தோல்வி.