தனது கிரிக்கெட் வாழ்வின் மோசமான நாள் குறித்து மனம் திறந்துள்ளார் இஷாந்த் சர்மா. 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, 2007ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு போட்டிகளிலும் ஆடிவந்த இஷாந்த் சர்மா, தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 

இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 267 விக்கெட்டுகளையும் 80 ஒருநாள் போட்டிகளில் ஆடி 115 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2016ம் ஆண்டுக்கு பிறகு இஷாந்த் சர்மா ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. 

டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடிவரும் இஷாந்த் சர்மா, இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், தனது கிரிக்கெட் வாழ்வின் மோசமான சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். அந்த சம்பவம் குறித்து பேசிய இஷாந்த் சர்மா, என்னால் இந்திய அணி தோற்றதை நினைத்து ஒருநாள், இரண்டு நாள் அல்ல.. 15 நாட்கள் அழுதேன் என்று இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். 

2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட அந்த தொடரின் மூன்றாவது போட்டி மொஹாலியில் நடந்தது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்த நிலையில், மொஹாலியில் நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 303 ரன்களை குவித்தது. 304 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கடைசி 3 ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 48வது ஓவரை இஷாந்த் வீசினார். 8வது வீரரான ஜேம்ஸ் ஃபாக்னர், இஷாந்த் சர்மாவின் அந்த ஓவரில் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிவிட்டார். இஷாந்த் வீசிய 48வது ஓவரில் 4 சிக்ஸர்கள் உட்பட 30 ரன்களை விளாசி அந்த அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 48வது ஓவரில் இஷாந்த் வீசிய ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த சம்பவத்தைத்தான் இஷாந்த் சர்மா இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.