ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் சேர்க்கப்படாதது குறித்து வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா வேதனை தெரிவித்துள்ளார். 

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயமடைந்து விடுவதால் பெரும்பாலான பவுலர்கள் நீண்டகாலம் தொடர்ந்து இந்திய அணிக்காக ஆடவில்லை. அப்படியே ஆடினாலும் மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆடுவதில்லை. ஜாகீர் கான் மட்டுமே நீண்டகாலம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு வகையான போட்டிகளிலுமே ஆடிவந்தார். நெஹ்ராவும் ஓரளவுக்கு தொடர்ச்சியாக இந்திய அணிக்காக ஆடினார். 

அவர்களை தவிர ஆர்.பி.சிங், பிரவீன் குமார், வினய் குமார், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், ஷமி, முனாஃப் படேல் பல வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி, பிறகு அப்படியே காணாமல் போய்விடுவர் அல்லது அனைத்து வகையான போட்டிகளிலும் ஆடமாட்டார்கள். 

அந்த வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பெரியளவில் அச்சுறுத்தும் விதமாக இருந்ததில்லை. இந்திய அணி பேட்டிங் அணியாக மட்டுமே இருந்துவந்தது. ஆனால் புவனேஷ்வர் குமார், பும்ரா ஜோடி இந்திய அணியை வலுவான பவுலிங் அணியாகவும் மாற்றியது. இந்த வேகப்பந்து இணை, முன்னெப்போதும் இல்லாத வகையில், எதிரணியை வேகப்பந்து வீச்சில் மிரட்டியது. 

புவனேஷும் பும்ராவும் மட்டுமே மூன்றுவிதமான இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளனர். ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் அவ்வப்போது ஒருநாள் அணிகளில் சேர்க்கப்படுகின்றனர். மற்றபடி இஷாந்த் சர்மா வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக வீசினார் இஷாந்த் சர்மா. இதையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள இஷாந்த் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பிடித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணிகளில் ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஏனென்றால் உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக அதில் இடம்பெறும் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் புவனேஷ் பும்ராவுடன் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இளம் வீரர் கலீல் அகமது கூட சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இஷாந்த் சர்மாவிற்கு வாய்ப்பு இல்லை. 

இந்நிலையில், இதுகுறித்து வேதனையுடன் பேசியுள்ள இஷாந்த் சர்மா, மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆட வேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் அணியில் மட்டும் எடுக்கப்பட்டிருப்பது வேதனையாக உள்ளது. தற்போது எனக்கு 30 வயது ஆகிறது. அடுத்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நான் இடம்பெறுவேனா என்பது சந்தேகம்தான். ஆனால் 34 வயதிலும் எனது திறமையை நாட்டுக்காக அளிப்பேன். நாட்டுக்காக ஆட இரண்டாவது வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் வெறுப்பாகத்தான் இருக்கும். அனுபவம் வாய்ந்த நான் முதிர்ச்சியடைந்த பவுலராக உள்ளேன். என்னால் இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்க முடியும். மேலும் ஃபீல்டிங் அமைத்து அதற்கேற்றாற்போல் பந்துவீச முடியும். ஆனால் அனுபவம் குறைந்த வீரர் போல் கருதி என்னை டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தேர்வு செய்யவில்லை. அந்த போட்டிகளில் ஆட எனக்கு தகுதியில்லையா? என்று ஆதங்கத்துடனும் வேதனையுடனும் கேள்வி எழுப்பியுள்ளார் இஷாந்த் சர்மா.