Is kohli avoid tamilnadu players

தமிழக வீரர்களை விராட் கோலி ஒதுக்குகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தோனி தலைமையிலான இந்திய அணியில், தோனியின் நம்பிக்கைக்குரிய ஸ்பின்னராக, பல தருணங்களில் வெற்றி நாயகனாக வலம்வந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியபின், கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, அஸ்வினை ஓரங்கட்டிவிட்டு சாஹலை பிரதான ஸ்பின்னராக அணியில் அடையாளப்படுத்தினார்.

மீண்டும் இந்திய அணியில் இடம்பெற அஸ்வின் தீவிர பயிற்சிகளையும் முயற்சிகளையும் எடுத்துவருகிறார். சாஹல், குல்தீப் போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட, ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின், லெக் ஸ்பின் போட பயிற்சி எடுத்து, இந்த ஐபிஎல்லில் இரண்டு ஸ்பின்களையும் போட்டுவருகிறார். தன்னால் ரிஸ்ட் ஸ்பின்னும் போடமுடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில், கோலி தலைமையிலான பெங்களூரு அணியில், தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் உள்ளார். வாஷிங்டன் சுந்தர் தான் ஒரு சிறந்த ஸ்பின்னர் என்பதை, இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 தொடரிலேயே நிரூபித்து காட்டினார். பவர்பிளே ஓவர்களில் அருமையாக பந்துவீசினார். சுந்தர் அருமையான பேட்ஸ்மேனும் கூட. 

பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள வாஷிங்டன் சுந்தருக்கு போதிய வாய்ப்புகள் கொடுக்காமல் கோலி புறக்கணித்துவருகிறார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில், பவர்பிளே ஓவரில் ஒரு ஓவருக்கு சுந்தர் 14 ரன்கள் கொடுத்தார். அதன்பிறகு சுந்தருக்கு ஓவரே கொடுக்கப்படவில்லை. ஆனால் சாஹலுக்கு 4 ஓவரையும் முழுமையாக கொடுத்தார் கோலி. அந்த போட்டியில் சுந்தரை முறையாக பயன்படுத்தாதும் பெங்களூரு அணியின் தோல்விக்கு ஒரு காரணம்.

அதேபோல், கடைசி தருணங்களில் களமிறக்கப்பட்டாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தான் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை சுந்தர் நிரூபித்தாலும், பேட்டிங்கில் அவருக்கு போதிய வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை.

பெங்களூரு அணியில், சுந்தரை கோலி பயன்படுத்துவதை பார்த்தால், வீரர்களை சரியாக இனம் கண்டு பயன்படுத்த தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே ஒதுக்குகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுந்தரை சேர்க்கவேயில்லை என்பது கூடுதல் வேதனை. அவரை நீக்கிவிட்டு முருகன் அஸ்வின் என்ற மற்றொரு தமிழக வீரருக்கு தானே வாய்ப்பு கொடுத்தார் என்ற வாதம் எழலாம். சுந்தரை நீக்காமல், அணியில் வைத்துக்கொண்டே முருகன் அஸ்வினுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அந்த அளவிற்கு பெங்களூரு அணியில் களையெடுக்கப்பட வேண்டிய வீரர்கள் இருக்கிறார்கள்.