நான் பந்தை சேதப்படுத்தியதாகக் கூறினால் அது தவறு என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக டூபிளெஸ்ஸிஸ் மீது புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அதன்முடிவில் டூபிளெஸ்ஸிஸ் போட்டி ஊதியத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் டூபிளெஸ்ஸிஸ், “நான் தவறிழைத்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை முற்றிலும் மறுக்கிறேன். நான் எந்தத் தவறும் செய்ததாக நினைக்கவில்லை. பந்தின் தன்மையை மாற்றுவதற்கும், பந்தை பளபளப்பாக்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் பந்தை சேதப்படுத்தியதாகக் கூறினால் அது தவறு.
பந்தை பளபளப்பாக்குவது என்பது அதை சேதப்படுத்துவதற்கு இணையாகாது என்றுதான் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் கூறுகிறார்கள். அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பந்தை பளபளப்பாக்குவது வழக்கமான ஒன்றுதான்.
எனது விவகாரத்துக்குப் பிறகு இதில் ஏராளமான குழப்பம் இருப்பதாக நினைக்கிறேன். பந்தை பளபளப்பாக்குவது தவறு என நான் நம்பவில்லை. எனவே அது மோசடியாகாது. நான் பந்தை பளபளப்பாக்கியதை தவறாகப் பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.
