ஐபிஎல் 12வது சீசன் தொடங்கும் தேதி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால் வெளிநாட்டிற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவில் தான் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த 11 சீசன்களில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா மூன்று முறையும் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ்) அணிகள் தலா இரண்டு முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.

ஐபிஎல் நடத்தப்படும் காலம், கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஐபிஎல் ஏலம் நடத்தப்படுவதில் இருந்தே ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறிவிடும். இந்த ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் உலக கோப்பை ஆகிய இரண்டும் நடக்க உள்ளது. 

கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்ததால் ஐபிஎல் தொடர் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டது. எனவே இந்த முறையும் வெளிநாட்டிற்கு மாற்றப்படுமா அல்லது இந்தியாவில் நடக்குமா என்ற சந்தேகம் இருந்துவந்தது. அதேபோலவே மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்குவதால் ஐபிஎல் எப்போது தொடங்குவதால் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், ஐபிஎல் குறித்து விவாதிக்க பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு இன்று ஆலோசனை நடத்தியது. மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் கள பிரச்னைகள் குறித்தும் உலக கோப்பை தொடங்குவதால், தேதி குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

இந்த ஆலோசனைக்கு பிறகு ஐபிஎல் 12வது சீசனை இந்தியாவிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எப்போதும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் ஐபிஎல் தொடர், உலக கோப்பை நடக்க உள்ளதால் இந்த முறை மார்ச் 23ம் தேதியே தொடங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.