ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டி நாளை அடிலெய்டில் நடக்கிறது.

முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்தது. சிட்னி ஆடுகளம் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால், குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகிய இரண்டு ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. இவர்களில் ஜடேஜா ஆல்ரவுண்டர் ரோலுக்கு எடுக்கப்பட்டார். மேலும் 5ம் வரிசை வீரராக தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. 

அதேநேரத்தில் கூடுதலாக ஒரு பார்ட் டைம் பவுலர் இல்லாத சூழல் உருவானது. புவனேஷ்வர் குமார், ஷமி, கலீல், குல்தீப், ஜடேஜா ஆகிய 5 பேரை தவிர கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்ஷன் இல்லாமல் போனது. தோனி விக்கெட் கீப்பர் என்பதால் அவரை விடுத்து மற்ற 5 பேட்ஸ்மேன்களுக்குமே பந்துவீச தெரியாது. அதனால் வேறு வழியின்றி ராயுடுவை இரண்டு ஓவர்களை வீசவைத்தார் கோலி.

எனவே அடிலெய்டில் நாளை நடக்க உள்ள அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. கேதர் ஜாதவ் பேட்டிங்குடன் பவுலிங்கிலும் பங்களிப்பு செய்வார். அவரது ஸ்பின் பவுலிங் சில நேரங்களில் திருப்புமுனைகளை ஏற்படுத்தும். தினேஷ் கார்த்திற்கு பதிலாக கேதர் ஜாதவை எடுப்பதன் மூலம் கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்ஷனும் கிடைக்கும் என்பதால் அவர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.  


 
அதேபோல அடிலெய்டு ஆடுகளம் ஸ்பின்னிற்கு பெரியளவில் ஒத்துழைக்காது என்பதால் குல்தீப் யாதவுடன் கேதர் ஜாதவை பயன்படுத்தி கொள்ளலாம் என திட்டமிடப்படும் பட்சத்தில் ஜடேஜா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். விஜய் சங்கர் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா/விஜய் சங்கர், குல்தீப், புவனேஷ்வர் குமார், ஷமி, கலீல் அகமது.