ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் 9ஆவது இடம் பிடித்த கிஷோர் ஜெனா!
பாரிஸ் ஒலிம்பிக்கில் 11ஆவது நாளான இன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் கிஷோர் ஜெனா 9ஆவது இடம் பிடித்து பதக்கத்திற்கான ரேஸில் இடம் பெற்றுள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா தவிர மற்ற நாடுகள் ஒன்றுக்கும் அதிகமான தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் என்று கைப்பற்றி வருகின்றன. ஆனால், இந்தியா இதுவரையில் 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதுவும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டும் தான் 3 வெண்கலப் பதக்கங்களை குவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.
சாதவிக் – சிராக் ரெட்டி ஜோடியும் ஏமாற்றம் அளித்தது. மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தோல்வியை தழுவினார். இந்த நிலையில் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா இன்று நடைபெறும் ஈட்டி எறிதல் தகுதி சுற்று குரூப் பி பிரிவில் போட்டியிடுகிறார். இதில், அவர் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்.
டோக்கியோ ஒலிம்பிக் தொடரைத் தொடர்ந்து பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரிலும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இணைந்து மற்றொரு இந்திய வீரரான கிஷோர் ஜெனாவும் போட்டியிட்டார். பிற்பகல் 1.50 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் கிஷோர் ஜெனா ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று குரூப் ஏ பிரிவு போட்டியில் விளையாடினார்.
இதில், முதல் முயற்சியில் 80.73மீ தூரம் எறிந்த ஜெனா, 2ஆவது முயற்சியில் பவுலாக எறிந்தார். கடைசியில் 3ஆவது முயற்சியில் 81.21மீ எறிந்து 9ஆவது இடம் பிடித்து பதக்கத்திற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தகுதி சுற்றுப்போட்டியில் முதல் இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்கு செல்வார்கள். இதன் அடிப்படையில் கிஷோர் ஜெனா 9ஆவது இடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக கிஷோர் ஜெனாவும் பதக்கத்திற்கான ரேஸில் இடம் பெற்றுள்ளார்.