Indian women team defeated Sri Lanka by 7 wickets
ஆசிய கோப்பை டி20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிரணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 3–வது வெற்றியை ருசித்தது.
ஆறு அணிகள் பங்கேற்றுள்ள 7–வது பெண்கள் ஆசிய கோப்பை டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்தப் போட்டி தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, இலங்கையை நேற்று எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஹாசினி பெரேரா ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களும், யசோதா மென்டிஸ் 27 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி தரப்பில் எக்தா பிஸ்த் 2 விக்கெட்டும், கோஸ்வாமி, அனுஜா பட்டீல், பூனம் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மந்தனா 12 ஓட்டங்களிலும், மிதாலி ராஜ் 23 ஓட்டங்களிலும் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 24 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
நான்காவது விக்கெட்டுக்கு அனுஜா பட்டீல், வேதா கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. அதன்படி, 18.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ஓட்டங்களுடனும், அனுஜா பட்டீல் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்திய வீராங்கனை அனுஜா பட்டீல் ஆட்டநாயகி விருது பெற்றார்.
