மகளிர் கிரிக்கெட்டுக்கும் ஐபிஎல் போட்டி தேவை. அதை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம் என்று இந்திய கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

இலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் பங்கமாக தோற்றது.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறியது:

“இந்தியாவில் அடுத்த தலைமுறை வீராங்கனைகளுக்கு எங்கள் வீராங்கனைகள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஏராளமான வீராங்கனைகள் கிரிக்கெட்டை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் வீராங்கனைகளை நினைத்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

இறுதி ஆட்டத்தில் எங்கள் வீராங்கனைகள் பதற்றமடைந்ததே தோல்விக்கு காரணம். பதற்றமான தருணங்களை சமாளிக்க அனுபவம் அவசியம். ஆனால் எங்கள் வீராங்கனைகளிடம் போதுமான அனுபவம் இல்லை. அதன் காரணமாகவே வெற்றி பெற முடியாமல் போனது. எனினும் இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் எங்கள் வீராங்கனைகள் போராடியவிதம் பெருமையளிக்கிறது.

இறுதி ஆட்டத்தின் கடைசியில் நாங்கள் தோற்றிருந்தாலும், பூனம் ரெளத் துணிச்சலான ஒரு இன்னிங்ஸை ஆடினார். அதேநேரத்தில் மிடில் ஆர்டரில் பின்வரிசை வீராங்கனைகள் சிறப்பாக ஆடி ரன் குவிப்பது அவசியமாகும். ஆனால் அதுதான் இந்திய அணிக்கு நீண்ட நாள் பிரச்னையாக உள்ளது.

மக்களிடம் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களால் பிசிசிஐயும் பெருமையடைந்திருக்கும் என நம்புகிறேன். நாங்கள் குரூப் சுற்றில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றோம். அப்போது நாங்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவோம் என யாருமே நினைத்திருக்கமாட்டார்கள்.

மகளிர் கிரிக்கெட்டுக்கும் ஐபிஎல் போட்டி தேவை. அதை உருவாக்குவதற்கு இது சரியான நேரம் என நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.