இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரரான மரின் சிலிச் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த குரோஷியாவின் மரின் சிலிச், தனது 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 31-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரெய்பரிடம் மோதினார்.

இதில், தரவரிசையில் பின் தங்கியிருந்த பிலிப் கோல்ஷ்ரெய்பரிடம் 4-6, 4-6 என்ற செட்களில் தோல்வி கண்டார் சிலிச். 

கோல்ஷ்ரெய்பரை இத்துடன் 11 முறை சந்தித்துள்ள சிலிச், அவரிடம் தனது 5-வது வெற்றியை இழந்துள்ளார். கோல்ஷ்ரைபர் தனது 4-ஆவது சுற்றில் பிரான்ஸின் பியரி ஹியூஜஸ் ஹெர்பர்ட்டை சந்திக்கிறார். 

மற்றொரு 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஜேக் சாக் 6-7(6/8), 6-4, 4-6 என்ற செட்களில் ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபஸிடம் தோற்றார்.

அதேபோன்று, போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ 6-4, 7-6 (7/3) என்ற செட்களில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை வீழ்த்தினார்.

கனடாவின் மிலோஸ் ரயோனிச் 7-5, 4-6, 6-2 என்ற செட்களில் போர்ச்சுகலின் ஜாவ் செளசாவை வீழ்த்தினார். 

ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயர் 6-4, 6-1 என்ற செட்களில் ஜப்பானின் டேரோ டேனியலை வீழ்த்தினர்.