Indian Wells tennis Jokovich lost in Japan

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 109-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் டேரோ டேனியலிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதன் போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்த ஜோகோவிச் தனது முதல் சுற்றில், உலகின் 109-ஆம் நிலை வீரரான ஜப்பானின் டேரோ டேனியலை எதிர்கொண்டார். 

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6 (7/3), 4-6, 6-1 என்ற செட்களில் டேனியலிடம் வீழ்ந்தார்.

தோல்வி குறித்து ஜோகோவிச் பேசியது: "இந்தத் தோல்வியை வழக்கத்துக்கு மாறான ஒன்று. இப்போட்டியில் நான் முதல் முறையாக விளையாடுவதுபோல் இருந்தது. எனது ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு ஒழுங்கை இழந்துவிட்டேன்" என்று அவர் கூறினார்.

இதனிடையே, நடப்புச் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஆர்ஜென்டீனாவின் ஃபெடரிகோ டெல்போனிஸை எதிர்கொண்டார். இதில், ஃபெடரர் 6-3, 7-6 (8/6) என்ற செட்களில் வென்றார்.

வெற்றிக்குப் பிறகு ஃபெடரர் பேசியது: "ஜோகோவிச்சின் தடுமாற்றம் ஆச்சர்யம் அளிக்கவில்லை. சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வரும் சாம்பியனுக்கு இது இயல்பான ஒன்றுதான்" என்று கூறினார்.