தனி ஆளாக மாஸ் காட்டிய திலக் வர்மா; சிக்சர் மழை; 2வது டி20 போட்டியில் இந்தியா 'த்ரில்' வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. திலக் வர்மா தனி ஆளாக போராடி இந்தியாவுக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து பேட்டிங்
இந்தியா-இங்கிலாந்து இடையே 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே தடுமாறினார்கள். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே பில் சால்ட் (4 ரன்) கேட்ச் ஆனார். இதனைத் தொடர்ந்து பென் டெக்கெட் (3 ரன்), ஹாரி ப்ரூக் (13 ரன்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சில சிக்சர்களை பறக்க விடட் கேப்டன் ஜோஸ் பட்லர் (30 பந்தில் 45 ரன்கள்), லியோம் லிவிங்ஸ்டன் (13) அக்சர் படேல் பந்தில் வீழ்ந்தனர். இங்கிலாந்து வீரர்கள் வந்து தலா ஒரு சிக்சர்கள் விளாசுவதும், மறுபக்கம் அவசர கதியில் ஷாட் ஆடி வெளியேறுவதுமாக இருந்ததால் கொத்து கொத்தாக விக்கெட்டுகள் சரிந்தன. இங்கிலாந்து அணி நிர்ணயிக்கபப்ட்ட 20 ஓவரகளில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்தது.
இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சி
இந்திய அணி தரப்பில் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். அடுத்து சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே இங்கிலாந்து பாஸ்ட் பவுலர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் அதிவேகத்துடன் பந்துவீசி நெருக்கடி கொடுததனர். இதனால் அதிரடி மன்னர்கள் அபிஷேக் சர்மா (12 ரன்) மார்க் வுட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். சஞ்சு சாம்சன் 5 ரன்னில் ஆர்ச்சர் ஷாட்ச் பிட்ச் பந்தில் கேட்ச் ஆனார்.
இந்திய அணி 19/2 என சிக்கலில் மாட்டிய நிலையில், பிறகு களமிறங்கிய திலக் வர்மா சிக்சர் மழை பொழிந்தார். ஆர்ச்சரின் ஓவரில் சர்வசாதாரணமாக சிக்சர்களை பறக்க விட்டார். மறுபக்கம் சில பவுண்டரிகளை விளாசிய சூர்யகுமார் யாதவ் (12 ரன்) கார்ஸ் பந்தில் போல்டாகி மீண்டும் ஏமாற்றினார். பின்பு களமிறங்கிய துருவ் ஜூரலும் (4 ரன்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் (7 ரன்) ஓவர்டன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் பரபரப்பு
இதனால் இந்திய அணி 78/5 என மீண்டும் பரிதவித்தது. ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த மண்ணின் மைந்தர் வாஷிங்டன் சுந்தர் திலக் வர்மாவுடன் இணைந்து ஓரளவு சிறப்பாக பேட்டிங் செய்தார். மார்க் வுட் பந்தில் ஒரு கேட்ச் கணடத்தில் தப்பி பிழைத்த அவர் அடுத்த ஓவரிலேயே 26 ரன்னில் கார்ஸ் பந்தில் போல்டானார். இந்திய அணிக்கு கடைசி 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்டது.
இதனால் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணை கேப்டன் அக்சர் படேல் (2 ரன்) லிவிங்ஸ்டன் பந்தில் தேவையில்லாமல் தூக்கி அடித்து கேட்ச் ஆனார். ஒருமுனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் திலக் வர்மா நங்கூரம் போல நிலைத்து போன்று அதிரடியாக விளையாடினார். ஜோப்ரா ஆர்ச்சரின் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசியதுடன் டி20 போட்டியில் தனது 3வது அரை சதத்தை அடித்து அசத்தினார்.
இந்தியா வெற்றி
ஜோப்ரா ஆர்ச்சரின் ஓவரில் அர்ஷ்தீப் சிங்கும் ஒரு பவுண்டரி அடிகக் அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது. ஆனால் அடுத்த ஓவரை வீசிய அடில் ரஷித் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து அர்ஷ்தீப் (6 ரன்) விக்கெட்டை சாய்த்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாகும். கடைசி 3 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு 2 விக்கெட்கள் தான் கைவசம் இருந்தது.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. 18வது ஓவரில் ரவி பிஸ்னோஸ் ஒரு பவுண்டரி அடித்ததால் கடைசி 2 ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அனைவரும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 19வது ஓவரை லிவிங்ஸ்டன் வீசினார். அந்த ஓவரில் ரவி பிஷ்னோய் ஒரு பவுண்டரி அடித்த்தால் இந்தியாவின் நெருக்கடி தணிந்தது. கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.
ஓவர்டான் வீசிய முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த திலக் வர்மா, இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து இந்தியாவை வெற்ரி பெற வைத்தார். இதனால் இந்திய அணி 4 பந்துகள் மீதம் வைத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 55 பந்தில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் விளாசிய திலக் வர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.