இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. வழக்கம்போலவே ராகுல் 9 ரன்களில் இரண்டாவது ஓவரிலேயே வெளியேற, பின்னர் புஜாரா-மயன்க் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தது. 

மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமாகி சிறப்பாக ஆடிய மயன்க், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 77 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இதையடுத்து புஜாரா - கோலி அனுபவ ஜோடியும் சிறப்பாக ஆடியது. ஆனால் கோலி 23 ரன்களில் ஆட்டமிழக்க, புஜாராவுடன் ரஹானே ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். புஜாரா அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடிவருகிறார். இந்திய அணி ஆஸ்திரேலிய பவுலிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிவருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி 2 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. காயத்தால் அவதிப்பட்ட அஷ்வின், போட்டியில் ஆடுமளவிற்கு உடற்தகுதி பெறாததால் ஆடவில்லை. எனவே குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகிய இரண்டு ஸ்பின்னர்களுடனும் ஷமி மற்றும் பும்ரா ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்களுடனும் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

ஸ்பின் பவுலிங்கிற்கு சிட்னி ஆடுகளம் ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதால் குல்தீப் மற்றும் ஜடேஜாவுடன் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் அஷ்வின் ஒருவேளை கடைசி போட்டியில் ஆடாவிட்டாலும் ஹனுமா விஹாரியை இரண்டாவது ஸ்பின்னராக பயன்படுத்த இருப்பது போன்ற கருத்தை கூறினார் கோலி. ஆனால் கடைசியில் குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

கோலியின் பேச்சு, ஒருவேளை எதிரணியை ஏமாற்றும் உத்தியாக கூட இருக்கும்.