ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தோனியின் அபாரமான பேட்டிங், ஹாட்ரிக் அரைசதத்திற்கு பிறகு தோனி தான் ஹாட் டாபிக். 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த தோனி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் அரைசதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார் தோனி. உலக கோப்பைக்கு முன் தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பது நல்ல விஷயம். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு, டெய்லி டெலிகிராபிற்கு பேட்டியளித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனி குறித்து பேசினார். அப்போது, தோனி ஒரு லெஜண்ட். தோனியை போன்ற வீரர்கள் எல்லாம் 30-40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் கிடைப்பார்கள். அதனால் தான் இந்திய ரசிகர்களுக்கு சொல்லுகிறேன். அவர் இருக்கும் வரை அவரது ஆட்டத்தை கண்டு ரசியுங்கள். சச்சின் டெண்டுல்கர் கூட கோபப்பட்டு பார்த்திருக்கிறேன். ஆனால் தோனி கோபப்பட்டு பார்த்ததேயில்லை என்று சாஸ்திரி தெரிவித்தார். 

தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ரிஷப் பண்ட் இருக்கிறார். எனினும் கிரிக்கெட்டின் தூதராக நீண்ட காலம் தோனி இருப்பதை போல மற்றொருவரை பெறுவது கடினம். ரிஷப் பண்ட்டின் முன்னோடியும் ஹீரோவும் தோனிதான். டெஸ்ட் தொடரின் போது தோனியிடம் தினமும் பேசினார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட், தோனி மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார். அதேபோல கோலியும் தோனியும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை ஓய்வறையை ஆரோக்கியமானதாக வைத்திருக்கிறது. அதனால் என் பணி எளிதாக இருக்கிறது என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.