Indian students in South Asian football competition

தெற்காசிய நாடுகள் இடையிலான கால்பந்து போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாட தமிழகத்தின், வத்தலகுண்டு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தெற்காசிய அளவிலான ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பூட்டான் நாட்டில் வரும் நவம்பர் 11, 12-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

அதில் இந்திய கால்பந்தாட்ட அணிக்காக விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி கடந்த அக்டோபரில் கோவா மாநிலத்தில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் கலந்துகொண்ட தமிழக அணியில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அன்னை வேளாங்கன்னி பள்ளியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பி.யோகேஷ்வரன், எஸ்.அஜய், சி.சந்தோஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் மூவரும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

மாணவர்கள் மூவருக்கும் பள்ளியின் தாளாளர் சேவியர், முதல்வர் ரெக்ஸ் பீட்டர், உடற்கல்வி ஆசிரியர் வெண்மணி ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.