ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. அந்த அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் அந்த அணி திணறிவருகிறது. ஃபின்ச்சின் தலைமையில் அனுபவமற்ற வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தி தொடரை எளிதாக வென்றது. 

ஆஸ்திரேலிய தொடரில் தோனி மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற உத்வேகத்துடன் நியூசிலாந்திற்கு சென்றுள்ளது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை நேப்பியரில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் வென்றதை போல கேன் வில்லியம்சன் தலைமையிலான வலுவான நியூசிலாந்து அணியை இந்திய அணி வென்றுவிட முடியாது. 

கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஆகிய இரு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால் போட்டி கடுமையானதாகவே இருக்கும். 2014ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்திற்கு சென்றபோது 4-0 என ஒருநாள் தொடரை இழந்து படுதோல்வியுடன் நாடு திரும்பியது இந்திய அணி.

மற்ற அணிகளை போலவே சொந்த மண்ணில் செம கெத்தான அணி நியூசிலாந்து. அதுமட்டுமல்லாமல் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், நிகோல்ஸ் ஆகிய வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி வலுவாக உள்ளதோடு மட்டுமல்லாமல் அந்த சூழலும் முறையான வடிவமற்ற தாறுமாறான மைதானங்களும் இந்திய அணிக்கு கூடுதல் சவாலாக திகழும். 

எனினும் இவற்றையெல்லாம் கடந்து நியூசிலாந்தை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. அதற்கு தகுதியான அணிதான் கோலி தலைமையிலான இந்திய அணி. 

நாளை நியூசிலாந்திற்கு எதிரான முதல் போட்டி தொடங்க உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, கடந்த முறை நியூசிலாந்து சென்றபோது பேட்டிங் ஒருங்கிணைவு இல்லாத அணியாக இருந்தோம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு பேட்டிங் குழுவாக நல்ல வளர்ச்சியடைந்துள்ளோம். எங்கள் திறமை என்னவென்பதை நாங்கள் இப்போது அறிந்திருக்கிறோம். நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 300க்கும் அதிகமான ரன்களை குவிக்கக்கூடிய அணி என்பதால், அப்படி அதிக ஸ்கோரை குவிக்கும்போது பதற்றமடையாமல், பார்ட்னர்ஷிப் அமைத்து இலக்கை விரட்ட வேண்டும். முதலில் பேட்டிங் ஆடினால் 300க்கும் அதிகமான ரன்னை குவிக்க வேண்டும். கடந்த முறை எங்களிடம் பொறுமையும் நிதானமும் இல்லாததால் பதற்றமடையாமல் பெரிய இலக்கை விரட்டும் மனநிலையில் இல்லாமல் இருந்தோம். ஆனால் இந்த முறை பக்குவப்பட்டுள்ளோம். ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் நான் இருப்பதால், எதிரணி பேட்ஸ்மேன்களின் திட்டத்தை அறிந்துகொண்டு செயல்பட முடிகிறது என கேப்டன் கோலி தெரிவித்தார்.