indian seam bowler bhuvanesh kumar new record
புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் அணியில் இடம்பெறுவதற்கு முன்புவரை பேட்டிங் அணியாக திகழ்ந்த இந்திய அணி, அவர்களின் வருகைக்குப் பிறகு சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது.

புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல், குல்தீப் என இந்திய பவுலர்கள் எதிரணிகளை மிரட்டுகின்றனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புவனேஷும் பும்ராவும் அசத்தினர். அதேபோல், ஒருநாள் தொடரை 5-1 என இந்திய அணி வெல்வதற்கு பவுலர்களின் பங்களிப்பு அளப்பரியது.

முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஷிகர் தவனின் பேட்டிங், புவனேஷ்வர் குமாரின் பவுலிங் ஆகியவைதான் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த போட்டியில் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார் கைப்பற்றினார்.

இதன்மூலம் புதிய சாதனை ஒன்றை புவனேஷ்வர் குமார் நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான சர்வதேச போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார். அதிலும் இந்த சாதனையை முதல் இந்திய வீரர் புவனேஷ் தான். இதற்கு முன்னதாக இந்திய அணியின் எந்த பவுலரும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.

ஆனால், புவனேஷ்வர் குமாருக்கு முன்னதாக, உமர் குல்(பாகிஸ்தான்), டிம் சௌதி(நியூசிலாந்து), அஜந்தா மெண்டிஸ்(இலங்கை), லசித் மலிங்கா(இலங்கை), இம்ரான் தாஹிர்(தென்னாப்பிரிக்கா) ஆகிய 5 வீரர்களும் மூன்று விதமான போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இந்த வீரர்களின் வரிசையில் தற்போது புவனேஷ்வர் குமாரும் இணைந்துள்ளார்.
