ஆண்களுக்கான தடகளப் போட்டி: 20கிமீ ரேஸ் வாக்கில் இந்தியா தோல்வி; 6 கிலோ மீட்டரிலேயே வெளியேறிய அக்ஷ்தீப் சிங்!
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான தடகளப் போட்டியில் 20கிமீ ரேஸ் வாக்கில் அக்ஷ்தீப் சிங் 6கிமீ தூரம் சென்ற நிலையில் பாதியிலேயே வெளியேறியுள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 6ஆவது நாளான இன்று காலை 11 மணிக்கு தடகளப் போட்டி தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 20கிமீ ரேஸ் வாக் பிரிவில் இந்தியா சார்பில் தேசிய சாதனை படைத்த அக்ஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஸ்ட் ஆகிய மூவரும் போட்டி போட்டனர். இதில் அக்ஷ்தீப் சிங் 6 கிமீ தூரம் சென்ற நிலையில் பாதியிலேயே பின் வாங்கியுள்ளார்.
ஆனால், விகாஷ் சிங் மற்றும் பரம்ஜித் சிங் ஆகியோர் 30 மற்றும் 31ஆவது இடங்களை பிடித்துள்ளனர். விகாஷ் சிங் 1 மணி நேரம் 22 நிமிடங்களில் 20கிமீ தூரத்தை கடந்து 30ஆவது இடம் பிடித்தார். ஆனால், பரம்ஜீத் சிங் 1 மணி நேரம் 23 நிமிடங்கள் 48 வினாடிகளில் இலக்கை கடந்து 37ஆவது இடம் பிடித்துள்ளார்.
ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த பிரையன் டேனியல் பின்டேடோ ஒரு மணி நேரம், 18 நிமிடங்கள் மற்றும் 55 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதே போன்று பிரேசில் நாட்டைச் சேர்ந்த கேயோ போன்பார்ம் ஒரு மணி நேரம், 19 நிமிடங்கள் 09 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்வாரோ மார்ட்டின் ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் 11 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.