உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் மானு பேக்கர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்ஸிகோவின் குவாதலஜராவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மானு பேக்கர் 237.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். 

மூன்று முறை உலக கோப்பை சாம்பியனும் மெக்ஸிகோவைச் சேர்ந்தவருமான அலெக்ஸான்ட்ரா ஸவாலா 237.1 புள்ளிகளுடன் வெள்ளியும், பிரான்ஸின் செலின் கோபர்வில்லே 217 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். மற்றொரு இந்தியரான யஷாஸ்வினி சிங் தேஸ்வால் 196.1 புள்ளிகளுடன் 4-வதாக வந்தார். 

வெற்றிக்குப் பிறகு பேசிய மானு பேக்கர், 'எனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே தங்கம் வென்றதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். எதிர்வரும் போட்டிகளிலும் இதேபோல சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன்' என்றார்.

11-ஆம் வகுப்பு மாணவியான மானு பேக்கர், ஆர்ஜென்டீனாவில் நடைபெற இருக்கும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தனக்கான இடத்தை ஏற்கெனவே உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இதுவரை இந்தியா 2 தங்கம், 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது.