Indian Open Boxing marie kom won Gold Medal

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 48 கிலோ பிரிவில் மேரி கோம் இறுதிச்சுற்றில் பிலிப்பின்ஸின் ஜோசி கபுகோவை 4-1 என்ற கணக்கில் வென்றார்.

அதேபோன்று 64 கிலோ பிரிவில் அஸ்ஸாம் வீராங்கனை விலாவ் பாசுமதாரி 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தின் சுதாபோர்ன் சீசோன்டியை வீழ்த்தி தங்கத்தை தனதாக்கினார்.

அதே மாநிலத்தைச் சேர்ந்த லோவ்லினா போர்கோஹெய்ன் 69 கிலோ பிரிவில் சகநாட்டவரான பூஜாவை வென்று முதலிடம் பிடித்தார்.

மற்றொரு பிரிவான 51 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பிங்கி ஜங்ரா, மங்கோலியாவின் ஜர்கலான் ஆசிர்பட்டை வென்றார்.

மற்றும் 54 கிலோ பிரிவில் மனீஷா, சகநாட்டவரான மீனாகுமாரியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இப்படி, மகளிர் பிரிவில் மொத்தமாக இந்தியா 5 தங்கங்களை தட்டிச் சென்றது.

எனினும், 60 கிலோ பிரிவில் இந்தியாவின் சரிதா தேவி, ஃபின்லாந்தின் மிரா போட்கெனோனிடம் வீழ்ந்து வெள்ளியை பெற்றார்.

ஆடவருக்கான 91 கிலோ பிரிவில் சஞ்ஜீத் இறுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தானின் சஞ்சார் துர்சுனோவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

தேசிய சாம்பியனான மனீஷ் கெளஷிக் 60 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் சகநாட்டவரான சிவ தாபாவை வென்றார்.