Indian Open Boxing Marie come advanced to finals

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் 5 முறை உலக சாம்பியனான மேரி கோம், 48 கிலோ பிரிவு அரையிறுதியில் மங்கோலியாவின் அல்டான்செட்செக் லுட்சாய்கானை வீழ்த்தினார்.

அதன்படி, இறுதிச்சுற்றில், மேரி கோம் பிலிப்பின்ஸின் ஜோசி கபுகோவை எதிர்கொள்கிறார்.

ஜோசி கபுகோ தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த இந்தியாவின் மோனிகாவை வென்றிருந்தார்.

அதேபோன்று, 60 கிலோ பிரிவு அரையிறுதியில் சகநாட்டவரான பிரியங்காவை வீழ்த்திய சரிதா தேவி, இறுதிச்சுற்றில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற ஃபின்லாந்தின் மிரா போட்கோனெனை எதிர்கொள்கிறார்.

57 கிலோ பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் ஷஷி சோப்ராவை வீழ்த்திய சகநாட்டவரான மோனிகா, இறுதிச்சுற்றில் ஃபின்லாந்தின் நெஸ்தி பீட்சியோவுடன் மோதுகிறார்.

ஆடவர் பிரிவில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியரான அமித் பங்கால், அரையிறுதியில் சகநாட்டவரான நுட்லாய் லால்பியாகிம்மாவை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

அதே பிரிவில் ஷியாம் குமாரும், 91 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவில் சதீஷ் குமாரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.