Indian footballers need to travel a long distance - Jamie Cavline Advise

17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி, இந்திய வீரர்களுக்கான முதல் படிக்கல். அவர்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று ஸ்பெயின் கால்பந்து வீரர் ஜேமி கேவிலன் தெரிவித்தார். 

2017-18 சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்.சி. அணிக்காக களமிறங்குகிறார் ஜேமி கேவிலன். இந்தியாவில் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜேமி கேவிலன் அளித்த பேட்டி: “17 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

இந்திய சீனியர் அணியின் தரவரிசையைப் பார்த்து அச்சம் கொள்ளக்கூடாது. எப்போதுமே சொந்த மண்ணில் பெரிய போட்டிகளில் விளையாடுவது மிகப்பெரிய சாதகமாகும்.

ரசிகர்கள்தான் இந்திய அணியின் 12-வது வீரர். எனவே உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதை நெருக்கடியாகக் கருதக்கூடாது. அதை சாதகமாக நினைத்துக் கொண்டு சிறப்பாக ஆடி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.

இந்திய வீரர்கள் தங்கள் சொந்த மண்ணில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடியது அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி, இந்திய வீரர்களுக்கான முதல் படிக்கல் ஆகும். அவர்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. 

2001-இல் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய ஸ்பெயின் அணியில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆனால் அந்த அணியில் இடம் பெற்றிருந்தவர்களில் ஆண்ட்ரூஸ் இனியெஸ்டா, டோரஸ் ஆகியோருக்கு மட்டுமே சீனியர் பிரிவில் ஸ்பெயினுக்காக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது” என்று தெரிவித்தார்.