Indian footballer Subrata Paul suspended ...
இந்திய கால்பந்து வீரர் சுப்ரதா பால் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததை அடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது என்று அகில இந்திய கால்பந்து சம்மேளன பொதுச் செயலர் குஷால் தாஸ் கூறினார்.
அகில இந்திய கால்பந்து சம்மேளன (ஏஐஎஃப்எஃப்) பொதுச் செயலர் குஷால் தாஸ் கூறியது:
“மும்பை முகாமில் இந்திய கால்பந்து அணியினர் பயிற்சியில் இருந்தபோது, வீரர்களிடம் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மார்ச் 18-ஆம் தேதி சுப்ரதா பாலிடம் இருந்தும் மாதிரி பெறப்பட்டுள்ளது.
இதில் சுப்ரதா பாலிடம் சேகரிக்கப்பட்ட அவரது 'ஏ' மாதிரியில், 'டெர்படாலின்' என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதற்கான தடயங்கள் இருப்பதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) எங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அவரை போட்டிகளிலிருந்து இடைநீக்கம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது சுப்ரதா பால் தனது 'பி' மாதிரியை பரிசோதிக்குமாறு கோரலாம். அத்துடன், தன் மீதான இடைக்காலத் தடைக்கு எதிராக மேல்முறையீடும் செய்யலாம்.
மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், அவரால் தொடர்ந்து விளையாட இயலும். ஆனாலும், நாடா விதிகள் அவரது மேல்முறையீட்டுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அவர் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும்.
சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு விதிகளின்படி, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பானது ஒரு வீரரின் ஊக்கமருந்து சோதனை முடிவுகளை சம்பந்தப்பட்ட வீரரிடமும், அந்த விளையாட்டுக்கான சம்மேளனத்திடமும் தெரிவிக்க வேண்டும்.
இதையடுத்து, தனது 'பி' மாதிரியை சோதிக்குமாறு கோருவதற்கு சம்பந்தப்பட்ட வீரருக்கு உரிமை உண்டு. அதன் முடிவுகள் வெளிவரும் வரையில் அந்த வீரர் இடைநீக்கம் செய்யப்படுவார்.
ஊக்கமருந்து குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும் வீரர், முதல்முறை தவறு செய்பவராக இருக்கும் பட்சத்தில் அவர் விளையாடுவதற்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என்று குஷால் தாஸ்” கூறினார்.
