அய்யய்யோ! கடைசி மேட்சும் போச்சா?; முக்கிய பாஸ்ட் பவுலர் திடீர் விலகல்; இந்திய அணிக்கு சிக்கல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் முக்கியமான பாஸ்ட் பவுலர் விலகியுள்ளார். அவர் யார்? ஏன் விலகினார்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
வெற்றி கட்டாயத்தில் இந்தியா
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்கு போட்டிகள் முடிந்து விட்ட நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் இந்தியா வெற்றி பெற்றது. 2வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தது. 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தியா ஆஸ்திரேலியான இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்கவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பில் நீடிக்கவும் இந்தியா இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும் கடும் விமர்சனங்களை சந்தித்த ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இந்த போட்டியில் நன்றாக விளையாட நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகாஷ் தீப் திடீர் விலகல்
இதனால் சிட்னி டெஸ்ட் போட்டியை அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், இந்திய அணியின் பாஸ்ட் பவுலர் ஆகாஷ் தீப் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார். ''முதுகுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஆகாஷ் தீப் சிட்னி டெஸ்ட்டில் இருந்து விலகி விட்டார்'' என்று அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் தீப் விலகி விட்டதால் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இந்திய அணியி இடம் பெறுவார். ஹர்சித் ராணா 2வது டெஸ்ட்டில் சரியாக பந்துவீசாததால் பிரசித் கிருஷ்ணா பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷ் தீப் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 3வது மற்றும் 4வது டெஸ்ட்டில் இடம்பெற்ற ஆகாஷ் தீப் ஓரளவு சிறப்பாகவே பந்துவீசினார்.
கடைசி டெஸ்ட்டில் சிக்கல்
3வது டெஸ்ட்டில் 40 ஓவர்கள் பந்துவீசிய ஆகாஷ் தீப் 125 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். 4வது டெஸ்ட்டில் 43 ஓவர்கள் வீசிய அவர் 140 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். 4வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் தொடர்ந்து சரியான லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த ஆகாஷ் தீப்புக்கு துரதிருஷ்டவசமாக விக்கெட் கிடைக்கவில்லை.
முதல் இன்னிங்சில் சிராஜ் விக்கெட் எடுக்க தடுமாறிய நிலையில், ஆகாஷ் தீப் பும்ராவுக்கு உதவியாக நன்றாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தடுமாற்றத்தை கொடுத்தார். இந்த தொடரில் பும்ரா மட்டுமே தனி ஆளாக சிறப்பாக பந்துவீசி வருகிறார். சிராஜ் பந்துவீச்சும், ஹர்சித் ராணா பந்துவீச்சும் சரியில்லை. ஆனால் பும்ராவுக்கு உதவியாக ஆகாஷ் தீப் ஓரளவு நன்றாக பவுலிங் போட்ட நிலையில், இப்போது அவர் விலகி இருப்பது கடைசி டெஸ்ட்டில் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.