ஜெய்ஸ்வாலுக்கு தவறான அவுட் கொடுத்தாரா நடுவர்? கொந்தளிக்கும் ரசிகர்கள்; உண்மையில் அவுட்டா? இல்லையா?
4வது டெஸ்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வாலுக்கு மூன்றாம் நடுவர் தவறான அவுட் கொடுத்ததாக இந்திய ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தியா படுதோல்வி
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம் (140 ரன்கள்) அடித்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நிதிஷ் குமார் ரெட்டி சூப்பர் சதம் (114 ரன்) விளாசினார்.
பின்பு 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மார்னஸ் லபுஸ்சேன் (70 ரன்), பேட் கம்மின்ஸ் (41), நாதன் லயன் (41) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இதன்பிறகு 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி வெறும் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவுட் சர்ச்சை
இந்திய அணி முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா (9), விராட் கோலி (5), கே.எல்.ராகுல் (0), ரிஷப் பண்ட் (30), ஜடேஜா (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டியும் (2 ரன்) நிலைக்கவில்லை. மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தால் அரை சதம் கடந்து இந்திய அணியை காப்பாற்றிக் கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் (84 ரன்) பேட் கம்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தவறான அவுட் கொடுத்தாரா நடுவர்?
அதாவது லெக் சைடில் கம்மின்ஸ் போட்ட பவுன்ஸ் பந்தை ஜெய்ஸ்வால் அடிக்க முயன்றபோது பந்து பேட்டில் உரசியதாக கூறி ஆஸ்திரேலிய பவுலர்கள் அப்பீல் செய்தனர். ஆனால் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் ரிவியூ செய்தனர். இந்த ரிவுயூ அடிப்படையில் ஜெய்ஸ்வால் அவுட் என 3ம் நடுவர் அறிவித்து விட்டார். ஆனால் நடுவர் தவறான அவுட் கொடுத்து விட்டதாக இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பந்து கிளவுஸில் பட்டதா?
அதாவது ரீப்ளையில் பந்து ஜெய்ஸ்வாலின் கிளவுஸில் லேசாக பட்டதாக கூறி 3ம் நடுவர் அவுட் கொடுத்து விட்டர். ஆனால் சினிக்கோ மீட்டரில் ( snicko meter) பந்து கிளவுஸ் அல்லது பேட்டில் உரசியதற்கான எந்த ஒரு அதிர்வலையும் ஏற்படவில்லை. ஆனால் பார்க்கும்போது பந்து லேசாக கிளவுஸில் பட்டதாக தெரிகிறது. பந்து கிளவுசில் பட்டதால் தான் கீப்பருக்கு செல்லும்போது பந்தின் திசை சற்று மாறியது.
இந்திய ரசிகர்கள் குற்றச்சாட்டு
இதை வைத்தே மூன்றாம் நடுவர் ஜெய்ஸ்வால் அவுட் என அறிவித்தார். ஆனால் 3ம் நடுவர் வேண்டுமென்றே தவறான அவுட் கொடுத்து விட்டதாகவும், ஆஸ்திரேலியா பொய் சொல்லி வெற்றி பெற முயற்சிப்பதாகவும் இந்திய ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதே வேளையில் சினிக்கோ மீட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது சரியாக வேலை செய்யவில்லை என்று ஒருதரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.