ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், முதல் இன்னிங்ஸில் ஆடியதற்கு எதிர்மாறாக ஆடிவருகிறது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 443 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி பும்ராவிடம் சரணடைந்தது. 

வெறும் 67 ஓவர்கள் மட்டுமே ஆடி 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ராவின் வேகத்தில் வெறும் 151 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி சுருள, 292 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 

வலுவான முன்னிலையுடன் தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார் கம்மின்ஸ். ஹனுமா விஹாரியை போன இன்னிங்ஸை போலவே ஒரு பவுன்ஸை போட்டு காலி செய்த கம்மின்ஸ், புஜாரா மற்றும் கோலியை டக் அவுட்டாக்கி அனுப்பினார். 

இவர்களை தொடர்ந்து ரஹானேவை ஒரு ரன்னில் வெளியேற்றினார். 28 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கடந்த இன்னிங்ஸில் சதமடித்த புஜாரா, இந்த இன்னிங்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். கோலியோ இரண்டாவது பந்தில் டக் அவுட். ரஹானே முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து 2வது பந்திலேயே அவுட் என வரிசையாக அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். 

இதையடுத்து நிதானமாக ஆட முனைந்த ரோஹித்தின் எண்ணமும் ஈடேறவில்லை. ரோஹித்தை 5 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பினார் ஹேசில்வுட். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மயன்க் அகர்வால் மறுமுனையில் விக்கெட்டை பறிகொடுக்காமல் தெளிவாக ஆடினார். ரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகு அகர்வாலுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. மயன்க் அகர்வாலும் ரிஷப் பண்ட்டும் களத்தில் உள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 292 ரன்கள் முன்னிலை பெற்றதால் பெரிய பாதிப்பில்லை. எனினும் இந்திய அணியின் மோசமான பேட்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கையை கொடுக்கும்.