வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி வென்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. அதற்கான 12 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியிலும் ராகுல் மற்றும் மனீஷ் பாண்டேவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

14 பேர் கொண்ட இந்திய அணியில் ராகுல் மற்றும் மனீஷ் பாண்டே இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் தற்போதைக்கு மிடில் ஆர்டர் பிரச்னை மட்டும்தான் உள்ளது. பல வீரர்கள் சுழற்சி முறையில் முயற்சி செய்து பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 4 மற்றும் 5வது இடங்களில் ராயுடு மற்றும் ரிஷப் பண்ட்டை இந்திய அணி முயற்சி செய்துவருகிறது. 

ராயுடு மீது அணி நிர்வாகமும் கேப்டன் கோலியும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் மனீஷ் பாண்டேவிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. மேலும் இதற்கு முன்னதாக கிடைத்த வாய்ப்புகளை மனீஷ் பாண்டே சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதேபோல ராகுல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால், இந்திய அணியில் ரோஹித், தவான், கோலி என டாப் ஆர்டர்கள் வலுவாக உள்ளதால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. 

இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ராகுல் மற்றும் மனீஷ் பாண்டேவிற்கு இடம் கிடைக்கவில்லை. முதல் போட்டியில் அறிவிக்கப்பட்ட அதே 12 வீரர்கள் தான் இரண்டாவது போட்டியிலும் இடம்பெற்றுள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், உமேஷ் யாதவ், ஷமி, கலீல் அகமது.