India won the T-20 series against New Zealand for the first time
நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதன்மூலம் மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
நியூஸிலாந்து – இந்தியா மோதிய 3-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் ஆட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த ஆட்டம் மழையால் சுமார் 9.15 மணியளவில் தொடங்கப்பட்டு 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இந்தியா 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய நியூஸிலாந்து 8 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 61 ஓட்டங்கள் எடுத்து வீழ்ந்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவன் 6 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 6 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ரோஹித் சர்மாவும் ஆட்டமிழந்தார். ஒன்பது பந்துகளை சந்தித்திருந்த அவர் 1 பவுண்டரியுடன் 8 ஓட்டங்கள் அடித்திருந்தார்.
தவன், ரோஹித் இருவருமே டிம் செளதி பந்துவீச்சில் சேன்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, கோலி - ஷ்ரேயஸ் ஐயர் இணை களத்துக்கு வந்தது. இதில் 6 பந்துகளை சந்தித்த கோலி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 13 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐஷ் சோதி பந்துவீச்சில் பவுண்டரி விளாச முயன்ற அவர், டிரென்ட் போல்ட் கைகளில் கேட்ச்சாகினார். தொடர்ந்து களத்துக்கு வந்த மணீஷ் பாண்டே சற்றே நிதானமாக ஆடினார். மறுமுனையில் 6 பந்துகளை சந்தித்த ஷ்ரேயஸ் ஐயர், 6 ஓட்டங்களுக்கு அவுட்டானார்.
ஐஷ் சோதி பந்தை இறங்கி வந்து விளாசிய அவர், கப்டில் கைகளில் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த பாண்டியா நிதானமாக ஆடினார். இந்நிலையில், போல்ட் வீசிய பந்தை மணீஷ் பாண்டே சிக்ஸருக்கு விளாச, கேட்ச் பிடிக்க முயன்ற சேன்ட்னர் நிலைதடுமாறிய நிலையில் பந்தை பிடித்து அருகில் இருந்த கிரான்ட்ஹோம் இடம் வீசினார். அதை அவரும் தவறாமல் பிடிக்க, 11 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பாண்டே ஆட்டமிழந்தார்.
இதையடுத்து தோனி களத்துக்கு வர, 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா. பாண்டியா 10 பந்துகளில் ஒரு சிக்ஸர் உள்பட 14 ஓட்டங்களுடனும், தோனி ஓட்டங்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி, இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் கிரான்ட்ஹோம் மட்டும் அதிகபட்சமாக 17 ஓட்டங்கள் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 11 ஓட்டங்கள் எடுக்க, இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
இந்திய தரப்பில் பூம்ரா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதையும் அவரே தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்துக்கு எதிராக டி-20 தொடரை முதல் முறையாக கைப்பற்றிய பெருமையை பெற்றுள்ளது இந்தியா.
