India won one day cricket in turban India Vs south africa
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி டர்பனில் நடைபெற்றது..
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி குயின்டான் டிக் காக்கும், ஹசிம் அம்லாவும, தென்ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். நிதானமாக ஆடிய இந்த ஜோடி 30 ரன்களை எடுத்த போது பிரிந்தது.

அம்லா பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், புவனேஷ்வர்குமாரின் ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிகள் விரட்டியடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சிறிது நேரத்தில் டி காக் 34 ரன்களில் (49 பந்து, 4 பவுண்டரி), யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
இதன் பின்னர் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தொடுத்த சுழல் தாக்குதலில் தென்ஆப்பிரிக்காவின் ரன்வேகம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. அதாவது 20 முதல் 30-வது ஓவருக்குள் தென்ஆப்பிரிக்கா 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. அப்போது தென்ஆப்பிரிக்க அணி 28 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்களுடன் பரிதவித்தது.

இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 270 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 20 ரன்னிலும் ஷிகர் தவான் 35 ரன்னிலும் வெளியேறினர். இதையடுத்து கேப்டன் விராட் கோலியும், ரஹானேவும் கூட்டணி அமைத்து சக்கைப்போடு போட்டனர்.

தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை பின்னியெடுத்த இவர்கள் கச்சிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். கோலி தனது 33-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
அடுத்து வந்த டோனி பவுண்டரி அடித்து இலக்கை எட்ட வைத்தார். இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 270 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது.

டர்பனில், இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை சாய்த்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அங்கு தென்ஆப்பிரிக்காவிடம் 6 ஆட்டங்களில் தோற்று இருந்தது.
இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நாளை மறுதினம் நடக்கிறது.
