ஒரு வசதியும் செய்து கொடுக்கல.. இப்ப வாழ்த்து சொல்றீங்க! அரவிந்த் கேஜ்ரிவாலை சங்கடப்படுத்திய மல்யுத்த வீராங்கனை
காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை, இந்த வாய்ப்பை பயன்படுத்தி நறுக்கென்று கேள்வி கேட்டுள்ளார், வெண்கலம் வென்ற திவ்யா கக்ரான்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் பர்மிங்காமில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றிகளையும் பதக்கங்களையும் குவித்துவருகின்றனர். 50 பதக்கங்களை நெருங்கும் இந்தியா பதக்க பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
குறிப்பாக பளுதூக்குதல், பாக்ஸிங், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்திவிட்டனர்.
அந்தவகையில், மல்யுத்தத்தில் ஒரே நாளில் 6 பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்து கூறினார். ஆனால் டெல்லியில் விளையாட்டு வீரர்களுக்கு எந்தவித வசதிகளையும் டெல்லி அரசு ஏற்படுத்தி கொடுக்காத அதிருப்தியில் இருந்த மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான், அரவிந்த் கேஜ்ரிவாலை நறுக்குனு ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான், காமன்வெல்த்தில் வெண்கலம் வென்றார். இவர் கடந்த 2018ம் ஆண்டே மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி எடுக்க போதுமான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அரவிந்த் கேஜ்ரிவாலிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், அந்த கடுப்பை, இப்போது சமயம் பார்த்து சுட்டிக்காட்டி தீர்த்து கொண்டுள்ளார். மல்யுத்தத்தில் பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் டுவிட்டரில் வாழ்த்து கூறியிருந்தார்.
அந்த டுவீட்டில், காமன்வெல்த்தில் இந்திய மல்யுத்த வீரர்கள் அசத்திவிட்டனர். ஒரே நாளில் 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளனர். சாக்ஷி மாலிக், தீபக் புனியா, திவ்யா கக்ரான் ஆகியோருக்கு வாழ்த்துகள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த திவ்யா கக்ரான், இப்போது நீங்கள்(கேஜ்ரிவால்) வாழ்த்து கூறியது மகிழ்ச்சிதான். ஆனால் மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சி எடுக்கக்கூட டெல்லி அரசு எந்தவித உதவியும் செய்து தந்ததில்லை. நான் 20 ஆண்டுகளாக டெல்லியில் வசித்துவருகிறேன். மல்யுத்த பயிற்சி பெறும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், இன்றுவரை எனக்கு டெல்லி அரசு எந்த உதவியும் செய்து தந்ததில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவாலின் மூக்கை உடைக்கும் விதமாக- திவ்யா கக்ரான் பதிலடி கொடுத்திருந்தார்.