மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய அணி சீன தைபேயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
டாக்காவில் நடந்த மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. அதாவது மகளிர் கபடி உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் சீன தைபேயை 35-28 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை தட்டித் தூக்கி அசத்தியுள்ளது. கடந்த முறையும் கோப்பையை வென்றிருந்த இந்திய அணி இந்த முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன்
இந்த தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி தங்கள் குழுவில் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஈரானை 33-21 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கெத்தாக நுழைந்தது. பைனலில் சீன தைபேயை துவம்சம் செய்து கோப்பையை கையில் ஏந்தியுள்ளது.
இந்திய அணிக்கு பாராட்டு
''மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்தியா வெல்லும் இரண்டாவது தொடர்ச்சியான உலகக் கோப்பை பட்டமாகும். இது கபடி விளையாட்டில் அவர்களின் வலிமையை மேலும் நிரூபிக்கிறது'' என பிகேஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மன்பிரீத் சிங் இந்திய அணியைப் பாராட்டி, "ஒட்டுமொத்த நாடும் பெருமைப்படும்படியான ஒரு செயல்திறனை மகளிர் அணி வெளிப்படுத்தியுள்ளது. அவர்களின் நம்பிக்கையும், குழுவாக இணைந்து செயல்பட்டதும் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு முன்னாள் இந்திய வீரராக, இந்த நிலையை அடைவது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். வீராங்கனைகள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு பெருமையான தருணம்
புனேரி பல்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அஜய் தாக்கூர் கூறுகையில், "டாக்காவில் நடந்த உலகக் கோப்பையை மகளிர் அணி தக்க வைத்துக் கொண்டது இந்தியாவிற்கு மிகவும் பெருமையான தருணம். இறுதிப் போட்டி வரையிலான அவர்களின் ஆதிக்கம் மற்றும் கோப்பையை வென்றது, கடந்த சில ஆண்டுகளில் மகளிர் கபடி எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
பங்களாதேஷ் உலகக் கோப்பையை நடத்துவது, இந்த விளையாட்டின் உலகளாவிய ஈர்ப்புக்கு ஒரு சான்றாகும். இந்த வேகம் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று நம்புகிறேன்" என்று கூறினார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


