இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. 

முதல் இன்னிங்ஸில் விராட் கோலி - ரஹானே ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 329 ரன்களை குவித்தது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் மிரட்டலான பவுலிங்கில் சரணடைந்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 352 ரன்களுக்கு டிக்ளேர் செய்து, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 521 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 62 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த பட்லர்-ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி, ஐந்தாவது விக்கெட்டுக்கு 169 ரன்களை சேர்த்தனர். சதமடித்த பட்லர் 106 ரன்களுக்கு பும்ராவின் பவுலிங்கில் அவுட்டானார். 

அதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. நான்காம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 311 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு ஒரு விக்கெட் மட்டுமே இந்திய அணிக்கு தேவைப்பட்டது. நேற்றைய ஆட்டநேர முடிவில் களத்தில் இருந்த ரஷீத்தும் ஆண்டர்சனும் இன்று களமிறங்கினர். அஷ்வினின் சுழலில் ஆண்டர்சன் அவுட்டானார். 317 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானதை அடுத்து, 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.