ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது இந்திய அணி.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழை குறுக்கீட்டால் முடிவின்றி கைவிடப்பட்டது. இதையடுத்து கடைசி டி20 போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் கடைசி போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கின. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் ஃபின்ச் மற்றும் ஷார்ட் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். எனினும் அதன்பிறகு குருணல் பாண்டியா ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை மளமளவென சரித்தார். ஷார்ட், மெக்டொர்மேட், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி ஆகிய நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் குருணல்.
 
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்களை குவித்தது. 165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். குறிப்பாக ஷிகர் தவான் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். தொடக்கம் முதலே அடித்து ஆடிய தவான் 22 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 41 ரன்களை குவித்து ஸ்டார்க்கின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அவரை தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த ராகுல் மந்தமாக ஆடினார். இந்த முறையும் சோபிக்கத்தவறிய ராகுல் 20 பந்துகளை எதிர்கொண்டு 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி ஏமாற்றினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் இலக்கை விரட்டுவதில் வல்லவரான கோலி, இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தார். ரிஷப்பின் விக்கெட்டுக்கு பிறகு கோலியுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடினார். அபாரமாக ஆடி அரைசதமடித்த கோலி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது. போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குருணல் பாண்டியாவும் தொடர் நாயகனாக ஷிகர் தவானும் தேர்வு செய்யப்பட்டனர்.