India will definitely win South Africa - Mohammad Azharuddin

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 6 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை நமது அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன் என்றார் முகமது அஸாருதீன்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இக்கட்டான சூழலில், இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் ஹார்திக் பாண்டியா சிறப்பாகச் செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனையடுத்து, கபில் தேவுடன் அவர் ஒப்பிட்டு பேசப்பட்டார்.

இந்த நிலையில் முன்னாள் இந்திய வீரர் முகமது அஸாருதீன், கொல்கத்தாவில் உள்ள பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசினார்.

அதில், "கபில் தேவ் ஒரே ஒருவர் தான். அவருடன் வேறு எந்த வீரரையும் ஒப்பிடக் கூடாது. கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடுமையான பயிற்சி மேற்கொண்ட அவர், ஒரே நாளில் 20 முதல் 25 ஓவர்கள் வரை வீசுவார். இன்றைய நிலையில், வேறு எந்த வீரராலும் இத்தனை ஓவர்களை வீச முடியுமா? என்பது சந்தேகமே.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை இழந்தது துரதிருஷ்டவசமானதாகும். கடைசி டெஸ்டில் மட்டும் வெற்றி பெற்று நமது கௌரவத்தை மீட்டுவிட்டோம். அந்த ஆட்டத்தில், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.

அனைத்து வீரர்களின் பங்களிப்புடன் கடைசி டெஸ்டை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 6 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை நமது அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன். நமது பேட்ஸ்மேன்கள் ஒரு நாள் ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள்.

புவனேஸ்வர் குமார் இரண்டாவது டெஸ்டிலும், ரஹானே முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களிலும் விளையாடி இருக்க வேண்டும்.

எனினும், கேப்டன் விராட் கோலியும், அணியும் வேறு விதமாக சிந்தித்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் அவர்கள் இருவரும் அணியில் இடம்பிடித்திருக்க வேண்டும் என்றே கருதினார்கள்.

யு-19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர் வெற்றியுடன் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதன் மூலம், நமது இளைஞர்களின் திறமை வெளிப்பட்டுள்ளது.

யு-19 அணியில் இடம்பெற்றுள்ள சுபமான் கில், கமலேஷ் நாகர்கோடி ஆகியோர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம்" என்று அவர் பேசினார்.