துப்பாக்கி சுடும் போட்டிகளை மீண்டும் சேர்க்காவிட்டால் 2022-ல் பர்மிங்ஹாமில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய தேசிய ரைஃபிள் அசோசியேஷன் தலைவர் ரனீந்தர் சிங் கூறியுள்ளார்.

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. 

அந்த விழாவின்போது இந்திய தேசிய ரைஃபிள் அசோசியேஷன் தலைவர் ரனீந்தர் சிங் கூறியது:

"விரைவில் இது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் எழுத உள்ளேன். 2022-இல் துப்பாக்கி சுடும் போட்டிகளை மீண்டும் சேர்க்காவிட்டால் இந்தியா அதை புறக்கணிக்க வேண்டும்.

கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்றிருந்தது. இப்பிரச்சனை தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க மத்திய விளையாட்டு அமைச்சகம், ஒலிம்பிக் சங்கத்திடம் வலியுறுத்துவோம். கட்டமைப்பு பிரச்சனைகள் உள்ளதால் 2022 போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் கைவிடப்படுகிறது என காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு சிஜிஎப் அறிவித்துள்ளது.

துப்பாக்கி சுடுதல் மீண்டும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இதுதொடர்பாக சர்வதேச துப்பாக்கி சுடுதல் சங்கம், சிஜிஎப் அமைப்புகளோடு தொடர்ந்து பேசி வருகிறோம்" என்று அவர் கூறினார்.