காமன்வெல்த் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, விபின் கசானா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது தகுதிச்சுற்றில் 80.42 மீ தூரம் எறிந்து முதல் முயற்சியிலேயே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். 

மற்றொரு இந்தியரான விபின் கசானா 78.8 மீ எறிந்து இறுதிச்சுற்று வாய்ப்பை பெற்றார்.

இதனிடையே, ஆடவருக்கான 1500 மீ ஓட்டத்தில் ஜின்சன் ஜான்சன் தனது தகுதிச்சுற்றில் 3.47 விநாடிகளில் இலக்கை எட்டி இறுதிச்சுற்று வாய்ப்பை உறுதி செய்தார். 

ஆடவருக்கான 4*400 மீ ரிலேவில் சுரேஷ் ஜீவன், அமோஜ் ஜேக்கப், முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 4.05 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆவதாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.