இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை குவித்தது. 

தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச் வெறும் 6 ரன்களில் இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரிலேயே வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் கேரி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோர் பொறுப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். பின்னர் அபாரமாக ஆடி ரன்களை குவித்த ஹேண்ட்ஸ்கம்ப் 73 ரன்கள் எடுத்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஹேண்ட்ஸ்கம்பின் கடைசி நேர அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரை ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் வீசினார். முதல் ஓவரிலேயே இந்திய அணியை தெறிக்கவிட்டார். முதல் ஓவரின் 5வது பந்து ரோஹித் சர்மாவின் கால்காப்பில் பட்டது. அதற்கு எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் மறுத்துவிட, ஆஸ்திரேலிய அணி ரிவியூ செய்தது. பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனதால் அவுட் இல்லை. ஆஸ்திரேலிய அணி ரிவியூவை இழந்தது. ஐந்தாவது பந்தில் ரோஹித்தை மிரட்டிய பெஹ்ரண்டோர்ஃப், கடைசி பந்தில் தவானை வீழ்த்திவிட்டார். அறிமுக போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார். 

இதையடுத்து ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். ரிச்சர்ட்ஸன் வீசிய இரண்டாவது ஓவர் மெய்டன் ஆனது. மீண்டும் ரிச்சர்ட்ஸன் வீசிய நான்காவது ஓவரில் கேப்டன் கோலி மற்றும் அம்பாதி ராயுடு ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 4 ஓவரில் 4 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. 4வது ஓவரிலேயே தோனி களத்திற்கு வந்துவிட்டார்.