பும்ராவின் நோபால் சோகம் தொடர்ந்து நீடித்த வண்ணம் உள்ளது. அதற்கு பும்ரா முடிவு கட்டாத வரையில், அது இந்திய அணிக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கும். 

இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத வகையில், சிறந்த வேகப்பந்து யூனிட்டை கொண்டுள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி என சிறந்த வேகப்பந்து வீச்சு கலவையை இந்திய அணி பெற்றுள்ளது.

இவர்களில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளுக்கும் முதன்மையான முக்கியத்துவம் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவிற்குத்தான் கொடுக்கப்படுகிறது. எனவே இந்திய அணியின் நட்சத்திர பவுலராக பும்ரா திகழ்கிறார். போட்டியின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான பவுலராக பும்ரா இருக்கிறார். அப்படியிருக்கையில், பும்ரா நோபால் வீசுவது தொடர்ந்து நீடித்துவருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அடில் ரஷீத் பும்ராவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அது நோபால் ஆனதால், நான்காம் நாள் முடிய வேண்டிய ஆட்டம் ஐந்தாம் நாள் வரை இழுத்தது. அதேபோல் சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், ஜோ ரூட் மற்றும் அடில் ரஷீத் ஆகிய இருவரும் பும்ராவின் நோபாலால் ஒருமுறை தப்பினர். 

டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் ஒவ்வொரு விக்கெட்டும் மிக முக்கியமானது. அதனால் இதுபோன்ற நோபால்களுக்கு பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் போட்டியின் முடிவே தலைகீழாக மாறக்கூடும். 

அப்படியான ஒரு பாதிப்பை பும்ராவால் ஏற்கனவே இந்திய அணி கண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான், பும்ரா வீசிய 4வது ஓவரிலேயே தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் நோபால் ஆதலால், வாய்ப்பை பெற்றார் ஜமான். அதன்பிறகு அந்த வாய்ப்பை பயன்படுத்தி அடித்து ஆடிய ஜமான், சதம் விளாசினார். அந்த அணி 50 ஓவர் முடிவில் 338 ரன்களை குவித்தது. அந்த போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, கோப்பையையும் இழந்தது. 

எனவே ஏற்கனவே ஒருமுறை நோபால் வீசியதால் பாகிஸ்தானிற்கு பெரும் விலை கொடுத்தது இந்திய அணி. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு திருந்தாமல் பும்ரா தொடர்ந்து நோபால் வீசிக்கொண்டிருக்கிறார். இதை பும்ரா விரைவில் திருத்தி கொள்ளாவிட்டால், அடுத்த உலக கோப்பையிலும் இந்திய அணி பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.