காமன்வெல்த் போட்டியின் தடகள விளையாட்டு வட்டு எறிதல் பிரிவில் முதன்முறையாக இந்தியாவின் சீமா புனியா வெள்ளியும், நவ்ஜீத் கெளர் தில்லான் வெண்கலமும் வென்றனர்.

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

இதில், தடகளத்தில் இதுவரை எந்த பதக்கதையும் இந்தியா பெறாத நிலை இருந்து வந்த நிலையில் வட்டு எறியும் போட்டிகள் நேற்று நடந்தன. அதில் சீமா புனியா 60.41 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இது காமன்வெல்த் போட்டிகளில் புனியாவின் 4-வது பதக்கமாகும்.

அவருக்கு அடுத்து 57.43 மீ தூரம் எறிந்து தில்லான் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தடகளத்திலும் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. 

புனியா பங்கேற்கும் இறுதி காமன்வெல்த் போட்டி இதுவாகும். கடந்த 2004-இல் 64.84 மீ தூரம் எறிந்ததே அவரது தனிப்பட்ட சாதனையாகும். 

ஆஸ்திரேலியாவின் டேனி ஸ்டீவன்ஸ் 68.26 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.