India Divij Saran advanced to the International Tennis Rankings
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண் முதல்முறையாக 50-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐரோப்பிய ஓபன் போட்டியின் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற திவிஜ் சரண், கடைசியாக தான் பங்கேற்ற மூன்று சேலஞ்சர் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். இதன் காரணமாக அவர் தற்போது 50-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதையடுத்து, இரட்டையர் பிரிவில் திவிஜ் சரணையும் சேர்த்து முதல் 50 இடங்களுக்குள்ளாக இரு இந்தியர்கள் உள்ளனர்.
முன்னதாக, ரோஹன் போபண்ணா 15-வது இடத்தில் உள்ளார். இரட்டையர் பிரிவில் திவிஜ் சரணின் நீண்டநாள் இணையான பூரவ் ராஜா 62-ஆவது இடத்தில் உள்ளார். லியாண்டர் பயஸ் 70-வது இடத்திலும், ஜீவன் நெடுஞ்செழியன் 97-வது இடத்திலும் உள்ளனர்.
இதனிடையே, ஷென்ஸன் சேலஞ்சரில் ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து பட்டம் வென்ற விஷ்ணு வர்தன் 16 இடங்கள் முன்னேற்றம் கண்டு, முதல் முறையாக 116-வது இடத்துக்கு வந்துள்ளார். ஸ்ரீராம் பாலாஜி 139-ஆவது இடத்தில் உள்ளார்.
ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் யூகி பாம்ப்ரி 145-வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 148-வது இடத்திலும், பிரஜனேஷ் கன்னேஸ்வரன் 255-வது இடத்திலும், சுமித் நாகல் 331-வது இடத்திலும், பாலாஜி 350-வது இடத்திலும் உள்ளனர்.
